இன்று அநேக கள்ள உபதேசங்கள் பெருகி இருக்கின்ற இந்த கடைசி நாட்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருடைய உபதேசங்களை குறித்து கிறிஸ்தவர்களாகிய நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. ஏனென்றால் இவர்கள் தங்களை ஆவிக்குரியவர்களாக காண்பித்து அநேக கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்துவினிடத்தில் சீஷர்கள் கடைசி நாட்களை குறித்து கேட்கும் பொழுது ஆண்டவர் அவர்களுக்கு முதலாவது சொன்னது “ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;” – மத்தேயு 24 : 4 என்றார். ஏனென்றால் “அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். ” – மத்தேயு 7 : 15
அப்போஸ்தலனாயிருக்கிற பவுலும் நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். – அப்போ 20:29 என்றார். இப்படிப்பட்ட ஓநாய்களையும் அவர்களுடைய கள்ள உபதேசங்களையும் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
யார் இவர்கள்?
Bible Students என்று அழைக்கப்படும் வேத மாணாக்கர்கள் தான் இன்று அநேக கிறிஸ்தவர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களை எந்த சபையும் சாராதவர்கள் என்று சொல்லிக்கொண்டு தங்களுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு கிறிஸ்தவர்கள் மத்தியில் வேதபாட கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று அநேக கிறிஸ்தவர்களுக்கு யேகோவா சாட்சிகளை குறித்து ஓரளவிற்கு நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வேத மாணாக்கரை குறித்த அறிவு இல்லாததினால் இவர்களுடைய கள்ள உபதேசத்தினால் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கும் யேகோவா சாட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இவர்களிடத்தில் “நீங்கள் யேகோவா சாட்சிகளா?” என்று நீங்கள் கேட்டால் தங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பொய் சொல்வார்கள். ஆனால் இவர்களிடத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் தான் யேகோவா சாட்சிகள்.
அவர்களின் கள்ள உபதேசங்களில் சில
மனிதனுக்கு ஆத்துமா என்ற ஒன்று இல்லை.
நரகம் இல்லை.
இரட்சிக்கப்படுவதற்கு மரித்த பின் மீண்டும் ஒரு வாய்ப்பு உண்டு
மரித்தோர் தாங்கள் செய்த தீமைக்கு தண்டனை இல்லை (Eternal retribution)
திரித்துவம் என்பது (Trinity) இல்லை.
இயேசு தேவன் இல்லை,சிருஷ்டிக்கபட்டவர்.அவர் பிரதானதூதனான மிகாவேல் தூதன்
பரிசுத்தஆவி தேவன் இல்லை, ஆள்தத்துவமானவரும் இல்லை.
1874-லிலேயே இயேசுவின் இரண்டாம் வருகை வந்துவிட்டதாகவும்,
1878-க்கு பிறகு மரித்தவர்கள் உயிர்த்தெழவது தொடங்கிவிட்டது.
1914-ல் புறஜாதியாரின் காலம் முடிந்துவிட்டது.
மேலே உள்ள கள்ள உபதேசத்தை பார்க்கும் பொழுது நாம் எளிதில் இவர்களை இனம் கண்டு கொள்ளலாம் என்று நினைக்கத் தோன்றலாம். ஆனால் இவர்கள் தொடர் வேதாகம விளக்ககூட்டம் (Bible Study) என்று விளம்பரப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக இவர்களுடைய கள்ள உபதேசத்தை கிறிஸ்தவர்கள் மத்தியில் பரப்பி அநேகரை வஞ்சித்து இருக்கிறார்கள்.
இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை முதலாவது விளங்கிக் கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொண்டவர்களே கிறிஸ்தவர்கள். இவர்கள் இயேசு கிறிஸ்துவை தேவனாக ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களுடைய உபதேசங்கள் மிகவும் விகற்பமானவை.
இவர்கள் எந்த ஒரு வேத வசனத்தையும் நேரடியாக அர்த்தம் எடுத்துக்கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். வேத வசனம் என்பது மூடி முத்திரையிடப்பட்ட புத்தகம் என்பதும், இவர்களிடம் கற்றால் மட்டுமே வேத வசனங்கள் புரியும் என்பதும் இவர்கள் கூற்று. வேத வசனத்தில் இவர்கள் கொள்கைக்கு சாதகமாக வராத எந்த சம்பவங்களையும், சொல்லர்த்தமாக அப்படியே எடுத்துக்கொள்ள இவர்கள் சம்மதிப்பதில்லை. அப்படிப்பட்ட வசனங்களின் ஒவ்வொரு வார்த்தைகளையும் தனித்தனியாக பிரித்து, வேதத்தில் அந்த வார்த்தை எந்த இடத்தில் இவர்களுக்கு சாதகமான கருத்து வரும்படி வருகிறதோ, அந்த பகுதியை காண்பித்து, அந்த சம்பவத்தின் மொத்த கருத்தையும் திசைதிருப்பி விடுவதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். இவர்கள் வேதத்தை வியாக்கியானம் செய்ய வைத்திருக்கும் ஒவ்வொரு குறிப்புகளும் சாத்தானின் வஞ்சிக்கிற ஆவியால் நிரம்பியவர்களால் எழுதப்பட்டவை என்பதை நாம் முதலாவது புரிந்துகொள்ள வேண்டும்.
இவர்கள் குறிப்புகளை பரிசுத்தாவியின் நிறைவின்றி வாசித்தால் வேதத்தை தினம்தோறும் வாசிப்பவர்கள் கூட குழம்பிவிடும் ஆபத்துண்டு. இவர்கள் நடத்தும் வேத பாட வகுப்புகளில் பரிசுத்த ஆவியானவரின் துணையில்லாமல் கலந்துகொள்பவர்கள், மூளைச்சலவை செய்யப்படும் ஆபத்தும் உண்டு. காரணம், வேத வசனத்திலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்களை பொறுக்கியெடுத்து, அந்த வேதவசனங்களை எப்படியெல்லாம் புரட்டக்கூடுமோ, அப்படியெல்லாம் புரட்டி, விசேஷமாய் தயாரிக்கப்பட்ட இவர்களுடைய வேதத்தைக்கொண்டே (NWT) இவர்கள் இப்படிப்பட்ட வகுப்புகளை நடத்துகிறார்கள்.
இவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இஸ்லாமியர்கள் இயேசு கிறிஸ்துவை வெறும் நபியாக மட்டும் ஏற்றுகொள்வார்கள். ஆனால் தேவனாகவோ அல்லது இரட்சகராகவோ ஏற்று கொள்வதில்லை. அதேபோல இந்த கள்ள உபதேச கூட்டத்தாரும் இயேசு கிறிஸ்துவை தேவ தூதன் மாத்திரமே என்றும் அவர் தேவனல்ல என்றும் போதித்து அநேகரை வஞ்சிக்கிறார்கள். இயேசு கிறிஸ்து தன்னுடைய இரண்டாம் வருகையில் ரோமன் கத்தோலிக்க (RC) சபையையும் CSI சபையையும் மற்ற பெயர் சபைகளையும் அழித்துப்போடுவார் என்றும் இவர்கள் மாத்திரமே உண்மையான சபை என்றும் சொல்லி வேத அறிவில்லாத ஜனங்களை பயமுறுத்தி தங்களுடைய கள்ள உபதேசத்தை நம்பவைக்க முயற்சி செய்கிறார்கள்.
குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? (லூக் 6:39) இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா? என்று இயேசு கிறிஸ்து ஒரு உவமையை சொன்னார். அதே போல இவர்களும் சத்துருவின் உதவியோடு அநேகரை கேட்டின் பாதையிலே வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பொதுவாக மற்ற மதத்தினர் மத்தியில் இவர்களுடைய உபதேசத்தை சொல்வதில்லை. இவர்களுடைய நோக்கமெல்லாம் கிறிஸ்தவர்களை குழப்பிவிட்டு இவர்களுடைய கள்ள உபதேசத்தை சபைக்குள்ளே நுழைக்கவேண்டும் என்பதே. இந்த கடைசி நாட்களில் சபை விழிப்பாக இருக்கவேண்டியது அவசியமாய் இருக்கிறது .