இந்த வேத மாணாக்கர்கள் மற்றும் யேகோவா சாட்சிகள் அலிகோரிக்கல் (allegorical) உபதேச முறையை பெரும்பாலும் பின்பற்றக்கூடியவர்கள். அலிகோரிக்கல் உபதேச முறை என்றால் எந்தவொரு வார்த்தைக்கும் அல்லது சம்பவத்திற்கும் நேரடி அர்த்தத்தை சொல்லாமல் மறைமுக அர்த்தம் அல்லது ஆவிக்குரிய அர்த்தம் என்று சொல்லி போதிப்பது. ஆனால் இவர்களுடைய கள்ள உபதேசத்திற்கு பொருந்துகின்ற வசனத்திற்கு மட்டும் நேரடி அர்த்தத்தை சொல்வார்கள்.
இவர்களுடைய இந்த கள்ள உபதேசத்தில் உதாரணமாக கீழே சில காரியங்களை நாம் பார்க்கலாம்.
நரகம் இல்லை என்னும் இவர்கள் கொள்கையை நிலைநாட்ட, வேதத்திலுள்ள ஐஸ்வர்யவான், லாசரு உவமையை (லூக்.16:19-31) இவர்கள் புரட்டி, ஐஸ்வர்யவான் என்பது (யூதரும், பென்யமீனரும் இணைந்த) யூதர் எனவும், லாசரு என்பது புறஜாதிகள் எனவும், பெரும்பிளப்பு என்பது யூதருக்கும் புறஜாதிகளுக்கும் நடுவில் உள்ள பிரிவினை எனவும், ஐந்து சகோதரர் என்பது இஸ்ரவேலின் மற்ற பத்து (ஐஸ்வர்யவான் என்பது இரண்டு கோத்திரம் என்றால் மற்ற ஐந்து என்பது பத்து என கணக்கிட்டு) கோத்திரத்தார் எனவும் கூறி, இயேசு கூறிய அந்த உவமையின் நேரடியான சொல்லர்த்தத்தை, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல மறைத்துவிடுவார்கள்.
ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம் செய்தபோது “உன் சந்ததி கடற்கரை மணலைபோலவும், வானத்து நட்சத்திரத்தைப் போலவும் இருக்கும்” என்றார். இதற்கு அர்த்தம் எண்ணமுடியாத அளவில் உன் சந்ததி இருக்கும் என்பதே! ஆனால் இவர்கள் இந்த வசனத்தில் ஆவிக்குரிய அர்த்தம் உண்டு என்று போதிப்பர். அதாவது இந்த வசனத்தின் மூலம் தேவன் ஒட்டுமொத்த உலகமக்களுக்கும் “நடக்கப்போகிறதை” அறிவிக்கிறார் என்று சொல்லி, கடற்கரை மணல் என்பது பூமியில் ஒரு ஜாதியையும், வானத்து நட்சத்திரம் என்பது பரலோகத்தில் ஒரு ஜாதியையும் குறிக்கும் என்பர். ஆதலால் பாவம் செய்தவர்கள் பூமியிலே ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து இருப்பர் என்றும், நீதி செய்தவர்கள் ஆண்டாண்டு காலமாக பரலோகத்தில் இருப்பர் என்றும் போதித்து, நரகம் இல்லை என்ற போதனைக்கு இதனை சான்றாக காண்பிப்பதுண்டு.
நல்ல சமாரியன் உவமையில் வரும் இரண்டு காசுகள், அது இரண்டு காசுகள் அல்ல என்றும், அதற்கு வேறு ஆவிக்குரிய அர்த்தங்கள் உள்ளன என்றும், அவை பொதுவாக புதிய ஏற்பாட்டையும், பழைய ஏற்பாட்டையும் குறிக்கின்றன என்றும் போதிக்கிறார்கள். மேலும் அந்த உவமையில் வரக்கூடிய சத்திரம் சபையைக் குறிக்கிறது என்றும் ஆதாரமில்லாத தங்கள் சொந்தக் கருத்துக்களைத் தேடிக்கண்டுபிடிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.
ஆபிரகாமின் மூன்று மனைவியரின் வாழ்க்கை: முதல் மனைவியான சாராளின் மகனான ஈசாக்கின் வாக்குதத்த சந்ததிக்கு கிறித்துவர்கள் ஒப்பீடாம்; இரண்டாம் மனைவி(?)யான ஆகாரின் சந்ததியார் கிறித்துவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களாம்; மூன்றாவது மனைவியான கேத்துராளின் சந்ததியார் ஒரு பாவமும் அறியாத உலகத்தாராம்; இந்த மூன்று கூட்டத்தையும் மூன்று வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு திட்டத்தின் மூலம் ஆண்டவர் மீட்டுக்கொண்டு இந்த உலகையே பரலோகமாக மாற்றிவிடுவாராம் என்பதுதான் இவர்கள் உபதேசம். இந்த கருத்திற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பதே உண்மை. காரணம் ஆபிரகாமின் வாழ்க்கை ஒரு சரித்திர சம்பவம். இதிலிருந்து வேதம் விவரிக்காத ஒரு கருத்தை, அல்லது வேறு எங்குமே இணைவசனம் இல்லாத ஒரு கருத்தை இவர்கள் திரிக்கிறார்கள்.
காணாமல்போன ஆடு (லூக்.15:4-7) உவமையில் காணாமல் போன ஆடு என்பது, தனி மனிதன் அல்ல எனவும், மொத்த மனுக்குலமும் என்பார்கள். அப்படியானால் மனந்திரும்ப அவசியமில்லாத மற்ற தொண்ணூற்றொன்பது நீதிமான்கள் என்பவர் யார் என்றால், அது, மிருகங்கள், பறவைகள், மீன்கள், பூச்சிகள், தாவரங்கள், தூதர்கள், கேரூபீன்கள் போன்ற தேவனுடைய மொத்த சிருஷ்டிகளைக் குறிக்கும் என்பார்கள். இங்கு நாம் கவனித்தால், மனிதனைத்தவிர மற்ற எல்லா சிருஷ்டிகளும், மனம்திரும்ப அவசியமில்லாத நீதிமான்கள் எனவும், மனிதன் மட்டுமே பாவம் செய்த காணாமல் போன ஆடு எனவும் கூறி, இவர்கள் எவ்வளவு தந்திரமாக வேதத்தை சாத்தானுக்கு சாதகமாக புரட்டுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
லூக்.22:38 “அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.” இந்தசம்பவத்தில் இயேசு பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன் என்று சொல்கிறார். இங்கே இரண்டு பட்டயம் என்பது புதிய ஏற்பாட்டையும், பழைய ஏற்பாட்டையும் குறிக்கின்றன என்று போதிக்கிறார்கள். அப்படியானால் பேதுரு எந்த ஏற்பாட்டை வைத்து பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான் என்று சொல்லமாட்டார்கள். பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள் என்று இயேசு சொல்கிறார். இவர்கள் கூற்றுப்படி பார்த்தால் வேதத்தை எடுக்கிற யாவரும் வேதத்தால் மடிந்து போவார்கள் என்றுதான் வரும். இந்தசம்பவத்தில் லூக்.22:37 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்படுவதற்குகாக பட்டயத்தை கொள்ளக்கடவன் என்று இயேசு சொல்கிறார்றென்று நமக்கு புரியும். இப்படி ஆதாரமில்லாத தங்கள் சொந்தக் கருத்துக்களை போதிக்கிறார்கள்.
மத்தேயு 7:22 “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” இந்த வசனத்தில் கர்த்தாவே! கர்த்தாவே! என்று இரண்டு முறை ஏன் வருகிறது என்றால் ஒன்று Roman catholic சபையையும் மற்றொன்று CSI சபையையும் குறிக்கின்றது என்று சொல்லி தங்களுக்கு சாதகமாக வேதத்தை புரட்டுகிறார்கள்.
இப்படி ஆவிக்குரிய அர்த்தத்தைத் தங்கள் இஷ்டப்படி யார்வேண்டுமானாலும் போதித்துவிட முடியும். ஆகவே இந்த போதனை மிகத் தவறானது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
"வேதத்தில் உள்ள வசனத்தில் மறைபொருள் ஒன்றும் சொல்லாதிருக்குமானால் அந்த வசனத்தை நேரடி அர்த்தத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. இன்றைய கள்ள உபதேசங்களுக்கு மூலக்காரணமே அலிகோரிக்கல் உபதேசம் என்றால் அது மிகையாகாது. "