“யோவான் 5:22,23 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்” என்று வேதம் தெளிவாக போதித்தாலும் இந்த வேத மாணாக்கர்கள் மற்றும் யேகோவா சாட்சிகள் தங்கள் உதடுகளினால் மாத்திரம் கிறிஸ்துவை கனம்பண்ணி அவருடைய தெய்வீகத்தை மறுதலிக்கிறார்கள். இவர்களுடைய நோக்கம் எப்படியாவது ஜனங்களை கிறிஸ்துவைவிட்டு பிரித்து சத்துருவின் கள்ள உபதேசத்தை நம்பவைக்க வேண்டும் என்பதே.
இவர்கள் இயேசு கிறிஸ்து தேவனல்ல என்பதற்கு ஆதாரமாக கூறும் வேத வசனங்கள் பின்வருமாறு:
யோவான் 14:28 என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
லூக்கா 18:18,19 நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவர் ஒருவனும் இல்லையே.
1கொரி 11:3 கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார்.
1கொரி 15:18 குமாரன் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருப்பார்.
வெளி 3:14 தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியானவர் இயேசு.
கொலோ 1:15 சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர் இயேசு.
இந்த வசனங்களுக்கு சகோ. வசந்தகுமார் அவர்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் என்ற புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார். அவற்றை பின்வருமாறு காணலாம்
நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி
என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் (யோவான் 14:28)
இயேசுக்கிறிஸ்துவின் போதனைகளில் சில வாக்கியங்கள் முழுமையாக விளங்கிக் கொள்வதற்குச் சிரமானவைகளாக இருப்பதனால், பலர் அவரை தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளனர். யோவான் எழுதிய சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தகைய கூற்றுக்களில் ஒன்று. அவரது தன்மையையும் தேவத்துவத்தையும் சர்வவல்லமையையும் அநேகர் சந்தேகிப்பதற்கும் மறுதலிப்பதற்கும் காரணமாயுள்ளது. ஏனென்றால் அவர் பிதாவாகிய தேவனைப் பற்றிக் குறிப்பிடும்போது யோவான் 14:28 இல் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் என தெரிவித்துள்ளார். இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கும் அனைவரும் தங்களின் உபதேசத்திற்கு ஆதாரமாக உபயோகிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.(1) இயேசுக்கிறிஸ்துவே பிதா தம்மிலும் பெரியவர் என்று கூறியமையால் அவர் பிதாவைவிடத் தாழ்மையானவர் என்றும் பிதாவுக்குச் சம்மான வல்லமையும் தெய்வீகமும் அற்றவர் என்றும் போதிப்பதற்கு வேதப்புரட்டர்கள் இவ்வசனத்தை உபயோகித்து வருகின்றனர்.
இயேசுக்கிறிஸ்துவின் கூற்றுக்களை சரியான விதத்தில் விளங்கிக் கொள்வதற்கு அவை எச்சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டன என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இன்று பலகையான உபதேசக்குழப்பங்கள் கிறிஸ்தவத்திற்குள் புகுந்துள்ளதற்குப் பிரதான காரணம், கிறிஸ்தவர்கள் வேத வசனங்களை வியாக்கியானம் செய்யும்போது(2) அவை சொல்லப்பட்ட சந்தர்ப்பத்தைக் கருத்திற் கொள்ளாமல் அவற்றை வியாக்கியானம் செய்வதேயாகும். உண்மையில் இயேசுக்கிறிஸ்து மனிதராக வாழ்ந்த காலத்திலேயே “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்“ என்று கூறினார். பிதாவுக்குச் சம்மான நிலையில் பிதாவைப் போல தேவமகிமையுடன் இருந்த இயேசுக்கிறிஸ்து தமது பரலோக மகிமையைவிட்டு, மனிதராக தாழ்வான நிலைக்கு வந்தார். இதைப் பற்றி வேதாகமம் விளக்கும்போது பிலிப்பியர் 2:6-7 ல் அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சொற்பிரயோகம் மூலமொழியில் “பற்றிப்பிடித்துக் கொண்டிராமல்“(3) என்னும் அர்த்தமுடையது. எனவே, இயேசுக்கிறிஸ்து தேவனுக்குச் சம்மாயிருக்கும் நிலையைப் பற்றி பிடித்துக் கொண்டிராமல், அதை விட்டுத் தாழ்வான நிலைக்குப் பூமிக்கு வந்துள்ளார்.
இயேசுக்கிறிஸ்து பிதாவைவிட தாழ்வான நிலைக்கு வநதாலும் அவர் தமது தேவத்துவத்தைத் துறந்து விட்டு வரவில்லை. என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். தேவனோடு சமமாக பரலோகத்தில் இருக்கும் நிலையையே அவர் விட்டு வந்துள்ளார் என்பதை நாம் மறக்கலாகாது. இயேசுக்கிறிஸ்து இவ்வுலக விட்டு மறுபடியுமாக பிதாவிடம் செல்லும்முன்பு அவரோடு பேசும்போது பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும் என்று யோவான் 17:5 இல் கூறியமை அவர் தமக்கிருந்த மகிமையையே பரலோகத்தில் விட்டு இவ்வுலகத்திற்கு வந்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. பிலிப்பியர் 2:6-7ல் “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்“ என்னும் வாக்கியத்தில் “ரூபம்“ என்பதற்கு மூலமொழியில உபயோகிக்கப்பட்டுள்ள “மோர்பே“ (Morphe) என்னும் கிரேக்கப்பதம் “உட்புறத் தன்மையை குறிக்கும் கிரேக்கப்பதமாகும்.(4) எனவே, இது இயேசுக்க்கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையையும் குணவியல்பையும் சுட்டிக் காட்டுகிறது.(5) இயேசுக்கிறிஸ்து இவற்றை விட்டு வந்ததாக வேதாகமம் கூறவில்லை. ஆதியிலிருந்தே தெய்வீக வார்த்தையாக இருந்த அவர் (யோவா. 1:1) மாம்சமாகியபோது, தெய்வீகத்தன்மையை இழந்து மாம்சமாக மாறிவிடவில்லை. யோவான் 1:14 இல் வார்த்தை மாம்சமாகி“ என்னும் வாக்கியத்தில் “ஆகி“ என்னும் பதம் மூலமொழியில் சிறப்பான அர்த்தம் உடையது. இது, “ஒன்றிலிருந்து இன்னுமொன்றாக மாறியதை அல்ல. மாறாக, முன்பு இருந்த நிலையோடு இன்னுமொரு புதிய நிலை சேர்க்கப்பட்டதையே குறிக்கின்றது.(6) அதாவது இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகிற்கு வந்தது தெய்வீகத் தன்மையைத் துறப்பதை அல்ல மானிடத் தன்மைகளை சேர்ப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது(7). எனவே, அவர் இவ்வுலகத்தில் மனிதராக வாழ்ந்த காலத்திலும் தேவனாகவே இருந்தார் இதனால்தான் ‘தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. (கொலோ 2:9 என்றும் “தேவனே மாமிசத்தில் வெளிப்பட்டார்’ (1 தீமோ 3:16) என்றும் வேதாகமம் அறியத்தருகிறது.
இயேசுக்கிறிஸ்து இவ்வுலகத்தில் வாழ்ந்த காலத்தில் முழுமையான தேவனாக இருந்தபோதிலும், பிதாவை விடத் தாழ்வான நிலையிலேயே இருந்தார். ஏனென்றால் பிதா பரலோகத்தில் மகிமை பொருந்தியவராய் இருந்தார். ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ, பூலோகத்தில் ஏழ்மை நிலையில் வாழ்ந்தார். உண்மையில், இத்தகைய நிலையைக் கருத்திற் கொண்டே இயேசுக்கிறிஸ்து என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் என்று கூறினார். அதாவது “இயேசுக்கிறிஸ்து தாம் அச்சமயம் இருந்த நிலையையும் பிதாவின் நிலையையும் ஒப்பிட்டே இவ்வாறு கூறியுள்ளார்.( எனினும் அவர் எப்போதும் இவ்வாறு தாழ்த்தப்பட்ட நிலையிலேயே இருந்து விடவில்லை. உலக மாந்தருடைய பாவங்களைப் போக்குவதற்காக தம்மை பலியாக இவ்வுலகத்திற்கு வந்த அவர், பாவப் பலியாக சிலுவையில் மரித்த பின்னர், உயிரோடெழுந்து மறுபடியுமாகத் தாம் முன்பிருந்த உன்னத நிலைக்குச் சென்றுவிட்டார். அவர் எல்லாவற்றுக்கும் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டதை பிலி 2:9-11 அறியத்தருகிறது.(9). உண்மையில் தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்தபோது அவர் கூறியவை உயர்த்தப்பட்ட நிலைக்கு பொருந்தாது. எனவே, அவர் தாழ்வான நிலையில் இருந்தபோது கூறியவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர் பிதாவைவிடத் தாழ்வானவர் என தர்கிப்பது தவறாகும். உண்மையில், இயேசுக்கிறிஸ்துவின் இக்கூற்று “அவருடைய தற்காலிக நிலைப் பற்றியதேயன்றி, அவருடைய தன்மையைப் பற்றியது அல்ல(10) என்பதை நாம் மறக்கலாகாது.
இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்திலும் யோவான் 10:30 இல் குறிப்பிட்டுள்ளபடி அவரும் பிதாவும் ஒரே தன்மையுடையவர்களாகவே இருந்தனர். எனவே இயேசுக்கிறிஸ்து பிதாவை விடத் தாழ்வானவர் அல்ல. யோவான் 14:28 இல தாம் பிதாவைவிடத் தாழ்மையானத் தன்மையுடையவர் என்று இயேசுக்கிறிஸ்து குறிப்பிடவில்லை என்பதை மூலமொழியில் உபயோகித்துள்ள பதம் தெளிவாகக் காட்டுகின்றது. கிரேக்க மொழியில் “பெரியது“ (meizon) என்பதையும் “சிறந்தது“ (Kreitton) என்பதையும் வேறுபடுத்திக் காட்ட இரு வித்தியாசமான சொற்கள் உள்ளன. (11) இயேசுக்கிறிஸ்து சிறந்தது “ (Kreitton) என்று அர்த்தம் தரும் பதத்தை உபயோகித்திருப்பாரேயானால் அவரைவிட பிதா உயர்வானவர் என்றே கருத வேண்டும். ஆனால் இயேசுக்கிறிஸ்து உபயோகித்த “பெரியவர்“ என்னும் பதம் தேவத் தன்மையின் மேன்மையினைச் சுட்டிக் காட்டும் வார்த்தை அல்ல. பிதா பரலோகத்திலும் தாம் பூலோகத்திலும் அச்சமயம் இருந்தமையினாலேயே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பதனால் அவர் பிதாவைவிடத் தாழ்வானவர் என்று எவ்விதத்திலும் கூறமுடியாது.
நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? (மத்தேயு 19:17)
இயேசுக்கிறிஸ்து தேவனை விடத் தாழ்வானவர் என்பதற்கு யெகோவா சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னுமொரு வேதவசனம், “தம்மை நல்ல போதகரே“ என்று அழைத்தவனுக்கு இயேசுக்கிறிஸ்து கொடுத்த பதிலாகும் அதற்கு அவர்: “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே (மத்தேயு 19:17, மாற்கு 10:18) என்று இயேசுக்கிறிஸ்து கூறியமையால் அவர் நல்லவர் அல்ல என்றும், இயேசுக்கிறிஸ்துவின் கூற்றின்படி தேவன் மட்டுமே நல்லவராயிருப்பதால், இயேசுக்கிறிஸ்து தேவன் அல்ல. அவர் தேவனை விடத் தாழ்வானவர் என்று யெகோவா சாட்சிகள் கூறுகின்றனர். (34) எனினும்இயேசுக்கிறிஸ்துவின் கூற்று இத்தகைய அர்த்தம் கொண்டதல்ல. தாம் நல்லவர் இல்லை என்று அவர் இவ்வசனத்தில் கூறவில்லை. மாறாக தேவன் மட்டுமே நல்லவர் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளில் ஒரு கேள்வியும் இருப்பதை நாம் அவதானிக்க வேண்டும். தன்னை நல்ல போதகரே என்று தம்மை அழைத்தவனிடம் (மத். 19.16) “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?“ என்று கேட்கிறார். அதாவது, நீ என்னை இவ்வாறு அழைப்பதற்கான காரணம் யாது என்று அவனிடம் கேட்கிறார். ஏனென்றால்“அக்காலத்தில் யூதர்கள் தங்கள் மதத்தலைவர்களை இவ்வாறு “நல்ல போதகரே“ என்று அழைப்பதில்லை(35) தேவனை மட்டுமே இவ்வாறு அழைக்க முடியும் என்பதே அக்கால யூதரது கருத்தாயிருந்தது. எனவே, அவன் தேவனுக்கு மட்டுமே உரிய தன்மையை அதாவது நல்லவர் என்னும் தன்மையை இயேசுக்கி்றிஸ்துவுக்கு உபயோகித்தமையால் நீ என்னை இவ்வாறு நல்லவன் என்று சொல்வதற்கான காரணம் என்ன? தேவனை அழைப்பதைப் போல நீ என்னை ஏன் அழைக்கிறாய்? என்று அவனி்டம் கேட்டார். இதனால்தான் தேவன் மட்டுமே நல்லவர் என்பதையும் இயேசுக்கிறிஸ்து அவனுக்குச் சுட்டிக் காட்டியுள்ளார். “அவன தம்மை நல்லவன் என்று அழைக்க வேண்டுமானால், தாம் தேவன் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகவே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு கூறியுள்ளார் (36)
இயேசுக்கி்றிஸ்து வார்த்தைகள் “நான் தேவனாக இல்லாதுவிட்டால் நீ என்னை இவ்வாறு அழைக்க வேண்டாம். ஏனென்றால் தேவன் மட்டுமே நல்லவர் எனும் அர்த்தமுடையது(37) எனவே, “இவ்வசனம் இயேசுக்கி்றிஸ்து தேவத்துவத்தை மறுதலிக்கவில்லை. மாறாக அதை மறைமுகமாக அறிய தருகிறது (38)
தேவனுடைய ஒரே பேறான குமாரன் (யோவான் 3:16)
இயேசு கிறிஸ்து “தேவனுடைய ஒரேபேறான குமாரன்“ (45) என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும், அவர் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கான ஆதாரமாக யெகோவா சாட்சிகளால் சுட்டிக் காட்டப்படுகிறது. எபிரேயர் 11:19 ஈசாக்கு ஆபிரகாமின் ஒரேபேறான குமாரன் எனறு குறிப்பிடப்பட்டுள்ளமையால், ஆபிரகாம் ஈசாக்கை சரீரப்பிரகாரமாய் பெற்றது போலவே, யெகோவா தேவன் பெற்ற பிள்ளையாக இயேசு கிறிஸ்து இருக்கிறார். என்றும், இதனாலேயே அவர் தேவனுடைய ஒரேபேறான குமாரன் என்று குறிப்பி்டப்பட்டுள்ளார்.“ என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். (46) இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதனால் அவர் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர், இதனால் அவரல் தேவனாக இருக்க முடியாது என்பதே இவர்களது தர்க்கமாகும். (47)
ஈசாக்கை ஆபிரகாம் பெற்றதுபோலவே தேவன் இயேசு கிறிஸ்துவைப் பெற்றார் என்றும் ஈசாக்கு ஆபிரகாமுக்கு குமாரனாய் இருப்பதைப் போலவே இயேசு கிறிஸ்துவும் தேவனுக்கு குமாரனாய் இருக்கின்றார். என்றும் யெகோவாவின் சாட்சிகள் கூறுவது தேவனையே நிந்திக்கின்ற கூற்றுக்களாகும். இது இயேசு கிறிஸ்துவுக்கு “ஒரு பரலோகத் தகப்பன் இருப்பது போல பரலோகத்தாயும் இருக்கின்றாள் எனும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. (48) இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்தையும் நித்தியத்துவத்தையும் நிராகரித்து, யெகோவா தேவனைக் கனப்படுத்துவதாக நினைக்கும் யெகோவாவின் சாட்சிகள் இத்தகைய விளக்கங்களினால் யெகோவா தேவனையே நிந்திக்கிறவர்களாக இருக்கின்றனர்.
மேலும், “ஒரேபேறான குமாரன்“ எனும் சொற்பிரயோகத்தை பெற்றெடுத்த ஒரேயொரு பிள்ளை“ என்று யெகோவாவின் சாட்சிகள் விளக்குவது தவறாகும். ஏனென்றால், ஈசாக்கு ஆபிரகாமின் “ஒரேபேறான குமாரன்“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதனாலும் அவன் ஆபிரகாமின் ஒரேயொரு பிள்ளையாக இருக்கவில்லை. ஆபிரகாமுக்கு வெறு பிள்ளைகளும் இருந்தார்கள். (ஆதி. 16:11, 25:1-6) ஆபிரகாமுடைய பிள்ளைகளில் ஈசாக்கு சிறப்பானவனாகவும், ஒப்பற்றவனாகவும் இருந்தமையினாலலேயே எபிரேயர் நிருபத்தில் அவன் ஆபிரகாமின் ஒரேபேறான குமாரன் என்று குறிப்பிடப்டப்டிருப்பதற்கான காரணமாகும்.
வேதாகமத்தில் “ஒரேபேறான குமாரன்“ எனும் பதம் “ஒருவன் பெற்றெடுத்த பிள்ளை“ எனும் அர்த்தத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு உபயோகிக்கப்படவில்லை (49) “ஒரேபேறான“ எனும் வார்த்தை இயேசு கிறிஸ்துவின் தனித்துவத்தையும் ஒப்பற்ற தன்மையையும் சுட்டிக் காட்டுகிறது. (50) அதாவது இயேசு கிறிஸ்துவைப் போல தேவனுக்கு வேறொருவரும் இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். அதேபோல “குமாரன்“ எனும் பதம் “ஒருவன் பெற்றெடுத்த பிள்ளை“ எனும் அர்த்தத்துடன் மட்டும் வேதகமக்கால மக்களால் உபயோகிக்கப்படவில்லை. உண்மையில் , இதை அறியாதவர்களே, இயேசு கிறிஸ்து தேவன் பெற்ற பி்ள்ளை என்றும், இதனால் , அவர் தேவனைவிட தாழ்வானவர் என்றும் தவறான கருத்துடையவர்களாய் இருக்கின்றனர். (51)
வேதாகமத்தில் ஒருவருக்கு பிறக்காதவர்களும் அவருடைய பிள்ளையாகக் குறிப்பிடப்படடடிருப்பதை நாம் அவதானிக்கலாம். இதனால்தான் சாமுவேலை ஏலி “என் மகனே“ என்று கூப்பிட்டார். (1 சாமு 3:16) சவுல் தாவீதைத் தன் குமாரன் என்று அழைத்துள்ளார். (1 சாமு 26:17) (52) அதேபோல, ஆசிரியர் தன் மாணவரை “என் மகனே“ என அழைப்பதை நீதிமொழிகளில் நாம் அவதானிக்கலாம். (நீதி. 7:1) எனவே வேதாகமத்தில் “குமாரன்“ “மகன்“ எனும் பதங்கள் ஒருவனுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு மட்டுமே உபயோகிக்க்பபட்டுள்ளது என்று கூறமுடியாது. இயேசு கிறிஸ்துவும் “தாவீதின் குமாரன்“ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் தாவீதுக்குப் பிறந்தவர் என்பது இதனது அர்த்தமல்ல. (மத். 1:1)(53) வேதாகமத்திலுள்ள வம்சவரலாறு அட்டவணைகளிலும், இடைக்கிடையே சில தலைமுறைகள் விடப்பட்டுள்ள போதிலும், ஒருவன் மற்றவனைப் பெற்றான் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (54) மேலும், தீரக்ககதரிசியின் சீடர்கள் “தீர்க்கதரிசியின் புத்திரர்“ என்றும் (1 ராஜா 20:35) பாடகர் குழுவினர் “பாடகரின் புத்திரர்“ என்றும் (நெகே. 12:28) அழைக்கப்பட்டுள்ளனர்.
வேதாகமம் குமாரன் எனும் பதத்தை உருவகமாக உபயோகித்துள்ளதையும் நாம் அவதானிக்கலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றினது தன்மை அல்லது குணத்தைக் குறிப்பிடுவதற்கு மகன் என்னும் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே, தீமையான மனிதன் “நியாயக்கேட்டின் மகன்“ (சங். 89:22) என்று குறிப்பிடப்பட்டுள்ளமயால், இவன் மனிதனுக்கல்ல. நியாயக்கேட்டுக்கு பிறந்தவன் என்று கூறமுடியாது.
மேலும். யாக்கோபையும் யோவானையும் இயேசு கிறிஸ்து இடியின் புத்திரர் என்று அழைத்தபோது, இவர்களிருவரும் இடிக்குப் பிறந்தவர்கள் எனும் அர்தத்தில் அல்ல. மாறாக இவர்களது குணம் இடியின் தன்மையைக் கொண்டிருந்ததையே சுட்டிக் காட்டியுள்ளார். (மாற். 3;17) அதேபோல, பர்னபா “ஆறுதலின் மகன்“ என்று அழைக்கப்பட்டுள்ளமை (அப். 4:36) அவன் ஆறுதலுக்குப் பிறந்தவன் என்பதனால் அல்ல. மாறாக, அவன் மற்றவர்களுக்கு ஆறுதலளிப்பவனாக இருந்தமையினாலேயாகும். இதேவிதமாகவே இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று வேத்தில் குறிப்பிட்டிப்பட்டிருப்பற்குக் காரணம் அவர் தேவனுக்குப் பிறந்தவர் எனும் அர்த்தத்தில் அல்ல. மாறாக அவர் தேவத்தன்மையுடையவர் என்பதனாலேயாகும்.
கிரேக்க மொழியில் குமாரன் என்பதைக் குறிக்க பொதுவாக இண்டு வார்த்தைகள் உள்ளன.
இவற்றில் ஒன்று சரீரப்பிரகாரமாகப் பிறக்கும் மகனை மட்டுமே குறிக்கும். ஆனால் மற்ற பதம், சரீரப் பிரகாரமான மகனை மட்டுமல்ல மற்றவர்களையும் மகனாக அழைக்க உபயோகிக்கப்படும் (55) புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று குறி்ப்பிடப்படும் இடங்களில். சரீரப் பிரகாரமான மகனை மட்டும் குறிக்கும் கிரேக்கப் பதம் அல்ல, மாறாக உருவகமாகவும் உபயோகிக்கப்படும் பதமே உள்ளது.
இதிலிருந்து இயேசு கிறிஸ்து தேவத்தன்மையுடையவர் என்பதைக் குறிப்பிடவே அவர் தேவனுடைய குமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இதன் மூலம் “இயேசு கிறிஸ்துவின் வழமையான தேவத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. (56) இயேசு கிறிஸ்து தேவனைவிடத் தாழ்வானர் என்பதை இது எவ்விதத்திலும் காண்பிக்கவில்லை. அவர் தேவனுக்கு சமமானவராக, தேவத் தன்மையுடையவராக இருப்பதையே இவ்விவரணம் அறியத் தருகிறது. (57)
இயேசு கிறிஸ்து தம்மைத் தேவனுடைய குமாரனாக அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல (யோவான் 10:36) மற்றவர்கள் தம்மை இவ்விதமாக அழைத்தபோது அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. (மத். 26:63-64). தம்மைத் தேவனுடைய குமாரனாகவும் தேவனைத் தம்முடைய பிதாவாகவும் இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட போது அவர் தம்மைத் தேவன் என்று கூறுகிறார் என்றே யூதர்கள் விளங்கிக் கொண்டனர். “யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்று இயேசு கிறிஸ்துவின் மீது குற்றம் சாட்டினார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து நேரடியாக, தாம் தேவன் என்று அவர்களிடம் கூறியிருக்கவில்லை. மாறாக, தம்மைத் தேவனுடைய குமாரன் என்றே அவர்களிடம் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் யூதர்கள் இதன் மூலம் அவர் தம்மைத் தேவனாகக் காண்பிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டனர்.
இதனால் தான் இயேசு கிறிஸ்து “நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே, தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?“ எனறு கேட்டார். (யோவான் 10:33-36) தேவனுடைய குமாரன் எனும் வார்த்தையின் மூலம், தம்மை தேவன் என்று கூறியமை, யூதர்களுக்கு தேவதூஷணமாக இருந்தமையினால் அதற்காக நியாய்பபிரமாணச் சட்டத்தின்படின் கல்லெறிந்து கொல்வதன மூலமாக அவருக்கு மரண தண்டனை கொடுக்க அவர்கள் முற்படடனர். (58 “தேவனுடைய குமாரன்“ என்னும் விபரணம் இயேசு கிறிஸ்து தேவன் என்பதற்கான உறுதியான ஆதாரமாய் உள்ளது.
கிறிஸ்துவிற்கு தேவன் தலைவராயிருக்கிறார் (I கொரி. 11:3)
இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல மாறாக அவர் மகிமையடைந்து பரலோகத்திற்கு சென்ற பின்பும் தேவனைவிடத் தாழ்வானவராகவே இருக்கிறார் என்பதே யெகோவா சாட்சிகளின் போதனையாகும். இதை நிரூபிப்பதற்காக இவர்கள் சுட்டிக் காட்டும் வேதவசனம் I கொரி. 11:3 ஆகும் கொரிந்து நிருபம் இயேசுக்கிறிஸ்து பரலோகத்திற்குச் சென்ற பின்னர் எழுதப்பட்டுள்ளமையால், இந்நிருபத்தில் இயேசுகிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, அவர் மகிமையடைந்த நிலையிலும் தேவனைவிட தாழ்வானவராக இருப்பதற்கான ஆதாரமாய் இருப்பதாக யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர்(49). “ இயேசுக்கிறிஸ்து எப்போதும் தாழ்வானவராகவே இருப்பதாகவே வேதம் கூறுகிறது.(50) என்பதே இவர்களது கருத்தாகும். எனினும் நாம் ஏற்கனவே பார்த்தபடி இயேசுக்கிறிஸ்து அவர் பிதாவின் வலது பரிசத்தில் வீற்றிருப்பதாகவே வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர் தேவனுக்கு சமமானவராகவே இருக்கிறார் என்பதை மறுக்க முடியாதுள்ளது.
I கொரி. 11:3 இயேசுக்கிறிஸ்து தேவனைவிட தாழ்வானவர் என்று கூறவில்லை. இவ்வசனத்தில் “கிறிஸ்துவுக்குத் தேவன் தலைவராயிருக்கிறார்“ என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும். இது தேவனுக்கும் இயேசுக்கிறிஸ்துவிற்கும் இடையிலான உயர்வுதாழ்வு பற்றிய விபரணம் அல்ல. ஏனென்றால் இவ்வசனம் இடம்பெறும் பகுதியில் தேவனினதும் இயேசுக்கிறிஸ்துவினதும் செயற்பாடுகள் பற்றியல்ல. மாறாக சபையில் ஆணும் பெண்ணும் நடந்துகொள்ள வேண்டிய முறைபற்றியே விளக்கப்பட்டுள்ளது. இதனால் “இயேசுக்கிறிஸ்துவையும் தேவனையும் பற்றிய குறிப்பு இதற்கான உதாரணமாகவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (52) 3ம் வசனத்தில் “தலை“ என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் (kephale) (53) உருவக விபரணமாய் இருக்கும்போது “அதிகாரம்“ அல்லது “ஆரம்பம்“ எனும் இரு அர்த்தங்களைத் தரும். எனவே தலையாயிருப்பவர் அதிகாரமுடையவராக அல்லது மற்றவரது ஆரம்பமாக இருப்பதாக இவ்வசனம் கூறுகிறது. (55) எனினும் இவ்வசனம் இடம் பெறும் பகுதியில் வழிபாட்டின் போது ஆணும் பெண்ணும் செயற்பட வேண்டிய விதம் பற்றியே விளக்கப்பட்டுள்ளமையால் அதிகாரம் எனும் அர்த்தமே பொருத்தமுடையதாக உள்ளது(56) உண்மையில். இயேசுக்கிறிஸ்து தேவனின் அதிகாரத்துக்குக் கீழாக செயற்படுவது போல சபையில் பெண்கள் ஆணினுடைய தலைமைத்துவத்திற்கு கீழாகச் செயற்பட வேண்டும் என்பதையே இப்பகுதியில் அப்..பவுல் விளக்கியுள்ளார்.
சபையில் ஆணினுடைய தலைமையின் கீழாகச் செயற்படும் பெண் ஆணைவிடத் தாழ்வானவள் என்று வேதம் கூறவில்லை. ஆணும் பெண்ணும் சம்மானவர்கள் என்பது வேத்த்தின் தெளிவான போதனையாகும். ஆண், பெண் இருவருமே தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதோடு (ஆதி. 1:26-28) கிறிஸ்துவுக்குள் இருவரும் ஒன்றாயிருக்கிறார்கள் (கலா. 3:28) எனவே, பெண் பெண்ணுக்குக் கீழாக இருந்து செயற்பட்டாலும் அவள் ஆணுக்குச் சம்மானவளகவே இருக்கிறாள். அதேபோலவே. இயேசுக்கிறிஸ்து தேவனுக்குக் கீழாக இருந்து செயற்பட்டாலும் தேவனுக்குச் சம்மானவராகவே இருக்கிறார். “இயேசுக்கிறிஸ்து தேவன் தலையாயிருப்பது அவரது தேவத்துவத்திலும் தேவதன்மையிலும் அல்ல. மாறாக அவரது செயல்களினாலாகும். (57). இது செயற்பாட்டு ரீதியிலான தலைமையே தவிர மேன்மையான தன்மை அல்ல“(58). நாம் ஏற்கனவே பார்த்தபடி இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் இருந்த காலத்திலும் அவரும் பிதாவும் ஒரே தன்மையுடையவர்களாகவே இருந்தனர். அப்படியிருந்தும் இயேசுக்கிறிஸ்து தம்மை பிதாவிற்குக் கீழ்படுத்திச் செயற்பட்டார். இதனடிப்படையிலேயெ இயேசுக்கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார். இது தேவனை விடத் தாழ்வானவர் என்பதற்கான ஆதாரம் அல்ல.
கீழ்படுத்தினவருக்குக் கீழ்பட்டிருப்பார் (1 கொரிந்தியர் 15:28)
இயேசுக்கிறிஸ்து தேவனைவிடத் தாழ்வானவர் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி காண்பிக்கும் வசனமாக யெகோவாவின் சாட்சிகளால் சுட்டிக்காட்டப்படுவது 1 கொரிந்தியர் 15:28 ஆகும். சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
என்று வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுக்கிறிஸ்து சர்வல்லமையுள்ள தேவனாக இருந்தால் இவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க மாட்டார் என்று கூறும் யெகோவாவின் சாட்சிகள், அவர் யெகோவா தேவனுக்கு முழுமையாக் கீழ்பட்டவராக இருப்பதாகத் தர்க்கிக்கின்றனர். (60) எனினும் இவ்வசனமும் நாம் இதற்கு முன்னர் ஆராய்ந்த “கிறிஸ்துவுக்கு தேவன் தலைவராயிருக்கிறார்“ எனு வசனத்தைப் போலவே இயேசுக்கிறிஸ்துவினுடைய செயலை அடிப்படையாக் கொண்ட தாழ்வான நிலையாக உள்ளதே தவிர, அவரது தேவத்தன்மையின் தாழ்வைப் பற்றிய விபரணம் அல்ல. மனிதரை மீட்பதற்காகத் தம்மையே தாழ்த்தி செயற்பட்ட இயேசுக்கிறிஸ்து தேவனுடைய திட்டத்திற்குத் தம்மைக் கீழ்படுத்தினார். “இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் எவ்வாறு தம்மைப் பிதாவுக்குக் கீழ்படுத்தி செயற்பட்டாரோ அதவிதமாக உலகின் முடிவிலும் தேவனுக்குக் கீழ்பட்டு செயல்படுவார் என்பதையே இவ்வசனம் அறியத் தருகிறது. (61). உண்மையில் மகிமையடைந்த நிலையிலும் இயேசுக்கிறிஸ்து தம்மைத் தாழ்த்திச் செயற்படுபவராய் இருக்கின்றார்(62)
இயேசுக்கிறிஸ்து தாழ்வானவர் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் வசனங்கள் அனைத்தும், மனிதரை மீட்கும் அவரது செயல்களோடு சம்பந்தப்பட்டதாய் இருப்பதை நாம் அவதானிக்கலாம். மானிட மீட்பைப் பற்றிய தேவ திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இயேசுக்கிறிஸ்து. மனிதரை மீட்டு இரட்சிப்பதற்காகத் தம்மைத் தாழ்த்தி செயல்பட்டார். எனினும் அவர் தம்மைத் தாழ்த்திச் செயற்பட்ட சந்தர்ப்பங்களிலும் முழுமையான தேவத்தன்மை உடையவராகவே இருந்தார். பிலிப்பியர் 2:6-7 இயேசுக்கிறிஸ்துவின் தற்காலிகமான தாழ்த்தப்பட்ட மானிட நிலையை அறியத் தருகையில், கொலோசேயர் 2:9 அவர் எப்போதும் முழுமையான தேவத்தன்மையை உடையராகவே இருந்தார் எனபதைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே அவர் தம்மைத் தாழ்த்தியபோது கூறிய விடயங்களையும். அத்தாழ்மையின் நிலையைக் குறிக்கும் வசனங்களையும் ஆதாரமாக் கொண்டு, அவர் பிதாவாகிய தேவனைவிடத் தாழ்வானவர் என்றோ, தேவத் தன்மையற்றவர் என்றோ கருவது தவறாகும்.
தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவர் (வெளிப்படுத்தல் 3:14)
வெளிப்படுத்தல் 3:14 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாயுமிருக்கிறவர்“ எனும் இயேசுக்கிறிஸ்துவின் கூற்றை“தேவனுடைய சிருஷ்டிகளின் ஆரம்பமாயிருக்கிறவர்“ என்று வியாக்கியானம் பண்ணும் யெகோவாவின் சாட்சிகள். இவ்வாக்கியம், இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கான ஆதாரமாய் இருப்பதாகக் தர்க்கிக்கின்றனர்(31)இயேசுக்கிறிஸ்து தேவனால் முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதனாலேயே, அவர் தேவனுடைய சிருஷ்டிகளின் ஆரம்பமாயிருப்பதாக இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கான காரணம் என்பது யெகோவா சாட்சியினரின் தர்க்கமாகும். (32) இவ்வாக்கியத்தில் “ஆதி“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் (arche) (33)“ஆரம்பிப்பவர்“ என்றல்ல மாறாக “ஆரம்பம்“ என்று மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகிறனர்(34) அதாவது இயேசுக்கிறிஸ்து “முதலாவது சிருஷ்டிப்பாக“ இருக்கிறார் என்பதே யெகோவா சாட்சிகள் இவ்வசனத்திற்கு கொடுத்துள்ள விளக்கமாகும்.
இவ்வசனத்தில் “ஆதி“ எனறு மொழிபெயர்க்கப்பட்டள்ள பதத்தை “ஆரம்பம்“ என்றும் மொழிபெயர்க்கலாம் என்பது உண்மையாயினும் (35) இதற்கு “ஆரம்பிப்பவர்“ “ஆரம்ப ஸ்தானம்“ “தோற்றுவாய்“ “முதல் காரணம்“(36) என பல அர்த்தங்களும் உள்ளன.(37)வெளிப்படுத்தல் 3:14 இல் இப்பதம் “முதல்காரணம்“ எனும் அர்தத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. (38) எனவே இப்பதம் சிருஷ்டிப்புக்குக் காரணர் யார் என்பதையே அறியத்தருகிறது. (39) உண்மையில், இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிப்பின் காரணராய். சிருஷ்டிப்பை ஆரம்பித்தவராய் இருப்பதையே இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது (40) கி.பி 4ம் நூற்றாண்டிலிருந்து இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலி்த்து அவரை சிருஷ்டிக்கப்பட்டவராகக் கருதும் வேதப்புரட்டர்கள் இப்பதத்தை “ஆரம்பம்“ என்று மொழிபெயர்த்து இயேசுக்கிறிஸ்துவின் ஆரம்பத்தைப் பற்றியே இவ்வசனம் கூறுகிறது என்று வாதிட்டு வந்துள்ளபோதிலும(41) இப்பதம் இவ்வசனத்திற்குப் பொருத்தமற்றதாகவே உள்ளது. ஏனென்றால் வெளிப்படுத்தல் புத்தகத்தின் ஏனைய வசனங்களில் இயேசுக்கிறிஸ்து நித்தியமானவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (42) எனவே இதை முரண்படுத்தும் விதத்தில் வெளிப்படுத்தல் 3:14 இல் அவர் நித்தியமற்றவர், சிருஷ்டிக்கப்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது. மேலும்வெளிப்படுத்தல் 5:13 இல் தேவனும் இயேசுக்கிறிஸ்துவும் வழிபாட்டுக்கு உரியவர்களாகவும் (43) ஏனைய சிருஷ்டிகள் அனைத்தும் இவர்களை வழிபடுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதும் இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றது. (44) அத்தோடு, வெளிப்படுத்தல் 19:10 இல் சிருஷ்டிக்கபட்டவைகளை வழிபடுவது தடைசெய்யப்பட்டிருப்பதும் வெளிப்படுத்தல் 5:13 இல் சிருஷ்டிக்கப்பட்டவைகள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதும், அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல வழிபாட்டுக்கு உரிய தெய்வம் என்பதற்கான உறுதியான ஆதாரமாய் உள்ளது.
சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் (கொலோசெயர் 1.15)
இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிகர் என்பதற்கு யெகோவா சாட்சிகள் சுட்டிக் காட்டும் பிரதான வேதவசனம் கொலோ. 1.15 ஆகும். இவ்வசனத்தில் இயேசுக்கிறிஸ்து “சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யெகோவா சாட்சிகள் இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு “சகலமும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னர் சிருஷ்டிக்கப்பட்டவர்“ என்று கூறுகின்றனர்(12). இதில “முந்தினபேறுமானவர்“ என்னும் வார்த்தை “முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர்“ என்னும் அர்த்தமுடையது என்பதே இவர்களது தர்க்கமாகும்(13). இதனால், இயேசுக்கிறிஸ்து “யெகோவா குடும்பத்தின் மூத்தபிள்ளை(14) என்று இவர்கள் கூறுகின்றனர். ஆங்கில வேதாகமத்தில் firstborn என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும் இவர்களது தர்க்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. எனினும் மூலமொழியில் இப்பதம் (Prototokos) “காலத்தில் முந்தினவர்“ என்றும் “தரத்தால் உயர்ந்தவர்“ என்னும் இரு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. இயேசுகிறிஸ்து முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர் என்று போதிப்பவர்கள் (16) “காலத்தால் முந்தினவர்“ என்னும் அர்த்தத்திலேயே இப்பதத்தை விளக்குகின்றனர். ஆனால் கொலோசெயர் 1.15 ஐத் தொடர்ந்து வரும் வசனங்களைக் கருத்திற் கொள்ளும்போது இயேசுக்கிறிஸ்து “காலத்தால் முந்தியவர்“ எனும் அர்த்தம் இவ்வசனத்திற்குப் பொருத்தமற்றது என்பதை அறிந்திடலாம். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்து “சபைக்குத் தலைவராகவும் “எல்லாவற்றிலும் முதல்வராகவும்“ இருப்பதாக அவ்வசனங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதால் (கொலோ. 1.18) “சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்“ எனும் சொற்பிரயோகம் இயேசுக்கிறிஸ்து “சிருஷ்டிக்கப்பட்ட சகலவற்றுக்கும் மேலானவராக இருக்கிறார்“ எனும் அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரமாய் உள்ளது(18) மேலும், சகலமும் இயேசுக்கிறிஸ்துவினால் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்துவரும் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமையால், சிருஷ்டிக்கராகிய அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல என்பது தெளிவாகின்றது(19) உண்மையில் இயேசுக்கிறிஸ்து “முதற்தரமானவர்“ என்பதையே கொலோசெயர் 1:15 அறியத் தருகிறது. (20)
யெகோவாவின் சாட்சிகள் தங்களது உபதேசத்தை நிரூபிப்பதற்காக கொலோசெயர் 1:15 தொடர்ந்து வரும் வசனங்களில் “சகல“ எனும் பதத்திற்கு முன் ஏனைய (Other) என்னும் பதத்தினை புகுத்தியுள்ளனர். இதன்படி இவ்வசனங்கள் “அவருக்குள் (ஏனைய)சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான (ஏனைய)சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், (ஏனைய)சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் (ஏனைய) எல்லாவற்றிற்கும் முந்தினவர், (ஏனைய)எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (21) இயேசுக்கிறிஸ்துவைத் தவிர ஏனையவை அனைத்தும் அவரால் சிருஷ்ட்டிக்கப்பட்டவை என்றும், இயேசுக்கிறிஸ்துவோ தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றும் யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். ஆனால். ஒரு உபதேசத்தை நிரூபிப்பதற்காக இவ்வாறு வேதவசனங்களை மாற்றுவது முழுமையான வேதபுரட்டாகும். “ஏனைய“ என்னும் பதம் மூலமொழியில் இல்லாதபோதிலும், மூலமொழியின் சரியான அர்த்தத்தை தருவதற்காக இப்பதத்தை தாங்கள் சேர்த்துள்ளதாக இவர்கள் கூறினாலும்(22) இவர்கள் மூலமொழியின் சரியான அர்த்தத்தைத் தருவதற்குப் பதிலாக, தங்களது உபதேசத்தினையே வேதத்திற்குள் புகுத்தியுள்ளனர். உண்மையில் “இயேசுவை சிருஷ்டிக்கப்பட்டவராகக் காண்பிப்பதற்காகவே மூலமொழியில் இல்லாத இப்பதம் இவ்வசனத்தில் புகுத்தப்பட்டுள்ளது. (23) இதன் மூலம் “சிருஷ்டிகராகிய இயேசுக்கிறிஸ்துவை இவர்கள் சிருஷ்டிக்கப்பட்டவராக மாற்றியுள்ளனர். (24)
யெகோவாவின் சாட்சிகள் தங்களது தர்க்கத்திற்கு ஆதாரமாய் பழைய ஏற்பாட்டில் இப்பதம் உபயோகிக்கப்பட்டுள்ள பகுதிகளையும் சுட்டிக் காட்டுவது வழமை. எனினும் பழைய ஏற்பாட்டின் கிரேக்கமொழி பெயர்ப்பிலும், இப்பதமானது “முன்னுரிமையையும் உயர்தரத்தையும் குறிக்கும் விதத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது(25) ஆனால் பழைய ஏற்பாட்டில் “பார்வோனின் முதற்பேறானவன்“ பார்வோனின் முதற்பிள்ளையாக இருப்பதனால் இயேசுக்கிறிஸ்து முதற்பேறானவர் என்று கூறும்போது, அவர் முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர்“ அவர் “தேவனுடைய முதலாவது பிள்ளை“ எனும் அர்த்தத்திலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாக யெகோவாவின் சாட்சிகள் தர்கிக்கின்றனர் (26) எனினும் கொலோசெயர் 1:15 இல் நாம் அவதானிக்க வேண்டிய முக்கியமான விடயம், இயேசுக்கிறிஸ்து “தேவனுடைய முதற்பேறானவர் என்று இவ்வசனத்தில் குறிப்பிடப்படாதிருப்பதாகும். அதாவது “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் (முதற்பேறானவர்) என்றே இவ்வசனம் உள்ளது. யெகோவாவின் சாட்சிகள் கூறுவதுபோல இவ்வசனத்தில் “பிறப்பித்தல்“ அல்லது “சிருஷ்டித்தல்“ எனும் அர்த்தத்துடனேயே இப்பதம் உபயோகிக்கப்பட்டிருந்தால் இயேசுக்கிறிஸ்து தேவனுடைய பிள்ளையாக அல்ல. மாறாக சிருஷ்டிக்கப்பட்டவற்றின் பிள்ளையாக இருப்பதாகவே கருதவேண்டும்(27) எனவே இது அர்த்தமற்ற விளக்கமாகவே உள்ளது.
பழைய ஏற்பாட்டில், முதலாவது பிறந்தவர்களே முதற்பேறானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர் எனும் யெகோவாவின் சாட்சிகளின் தர்க்கத்திலும் எந்தவித உண்மையும் இல்லை. உதாரணத்திற்கு தாவீது குடும்பத்தின் கடைசி பிள்ளையாக இருந்தாலும் சங்கீதம் 89.:27ல் அவன் முதற்பேறானவன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளான். அதேபோல். எப்பிராயீம் யோசேப்பின் இரண்டாவது மகனாக இருந்தபோதிலும் (ஆதி 41:50-51) எரேமியா 31:9 இல் அவனும் ”முதற்பேறானவன்“ என்று அழைக்கப்பட்டுள்ளான். (28) மேலும் இஸ்மவேல் பிறந்து 13 வருடங்களின் பின்னர் பிறந்த ஈசாக்கு ஆபிரகாமின் முதற்பேறானவனாக இருப்பதும் இப்பதத்தின் அர்த்தத்தை நமக்கு அறியத் தருவதாய் உள்ளது. “வேதாகமக் காலத்தில், முதற்பேறானவன் எனும் பதம் முதலாவதாக பிறந்தவன் எனும் அர்த்தத்தில் உபயோகிக்கப்படவில்லை. மாறாக இப்பதம் முன்னுரிமையையும் முதன்மையான இடத்தையும் முதற்தரத்தையும் குறிக்கும் சொல்லாகவே இருந்தது. (29) எனவே இயேசுக்கிறிஸ்து முதலாவதாகச் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று வேதம் கூறவில்லை. அவர் சிருஷ்டிக்கப்பட்ட சகலவற்றையும் விட மேலானவராகவும், சகலவற்றிற்கும் முதல்வராகவும் இருக்கிறார் என்பதையே சுட்டிக் காட்டுகிறது. மேலும், யெகோவின் சாட்சிகள் தர்க்கிப்பதுபோல் இவ்வசனம் இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கவில்லை. ஏனென்றால் அடுத்த அதிகாரத்தில் ““தேவத்துவத்தின் பூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது“ எனும் வாக்கியத்தின் மூலம் இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (கொலோ. 2:9) (30)