திரித்துவத்தை மறுதலிக்கின்ற இந்த வேத மாணாக்கர்கள் மற்றும் யேகோவா சாட்சிகள் இயேசு கிறிஸ்து முன்பு மிகாவேல் தூதனாய் இருந்தவர் என்றும் பின்பு பிதா அவரை குமாரனாக உயர்த்தினார் என்றும் போதித்து இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக பழைய ஏற்பாட்டின் சில வசனங்களை சொல்லி ஜனங்களை கிறிஸ்துவைவிட்டு பிரித்து இவர்களுடைய கள்ள உபதேசத்தை நம்பவைக்க முயற்சி செய்கிறார்கள்.
மிகாவேல் என்பதிற்கு எபிரேய மொழியில் “தேவனை போன்றவர்” என்று அர்த்தம் என்று சொல்லி இயேசு கிறிஸ்துவும் மிகாவேல் தேவ தூதனும் ஒருவர் தான் என்று சொல்லி கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிக்கிறார்கள். ஒருவர் என்னிடம் மிகாவேல் “தேவனை போன்றவர்” என்றால் அது இயேசு கிறிஸ்துவாகத்தான் இருக்க முடியும் என்று வாதிட்டார். நான் அவரிடம் இதற்க்கான ஆதாரம் வேதத்தில் எங்கும் இல்லை. உண்மையில் தேவனை போன்று (சாயலாக, ரூபமாக) படைக்கப்பட்டது மனிதர்களாகிய நாம் தான் (ஆதி 1:26) அதற்காக நீங்களும் இயேசு கிறிஸ்துவும் ஒன்று என்று சொல்லலாமா என்று கேட்டேன். அவரிடத்தில் பதில் இல்லை. ஆனால் உண்மையில் மிகாவேல் என்பதிற்கு “யார் தேவனை போன்றவர்? who is like God? ” என்ற அர்த்தம் தான் உள்ளது.
பழைய ஏற்பாட்டில் சில இடங்களில் தூதனானவராகவும் புதிய ஏற்பாட்டில் மனிதனாகவும் இயேசு கிறிஸ்து மனிதனுக்காக மனிதனோடு இடைப்பட்டார் என்று வேதத்தில் நாம் காணலாம். ஆனால் அவர் வெறும் தேவ தூதனானவராகவோ அல்லது மனிதராகவோ மட்டும் இல்லை தேவனாகவே இருந்தார் (யோவான் 1:1) என்று வேதம் தெளிவாக கூறினாலும் இந்த கள்ள உபதேச கூட்டத்தார் அதை ஏற்று கொள்வதில்லை.
இஸ்லாமியர்கள் இயேசு கிறிஸ்துவை வெறும் நபியாக மட்டும் ஏற்றுகொள்வார்கள். ஆனால் தேவனாகவோ அல்லது இரட்சகராகவோ ஏற்று கொள்வதில்லை. அதேபோல இந்த கள்ள உபதேசத்தை கூட்டத்தாரும் இயேசு கிறிஸ்துவை தேவ தூதன் மாத்திரமே என்றும் அவர் தேவனல்ல என்றும் போதித்து இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிக்கிறார்கள். இவர்கள் இயேசு கிறிஸ்துவை பெயரளவில் உயர்த்தி பேசினாலும் உள்ளத்திலோ பட்சிக்கிற ஓநாய்கள்.
பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய தூதனானவர்
கர்த்தருடைய தூதனானவர் என்று பழைய ஏற்பாட்டில் ஆதி 16:7 ல் சொல்லப்பட்டுள்ளது “கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:” ஆனால் இந்த தூதனானவர் யார் என்று ஆதி 16:13 தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. “அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.”
தேவதூதன் என்று பழைய ஏற்பாட்டில் ஆதி 31:11 சொல்லப்பட்டுள்ளது “அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.” ஆனால் இந்த தேவதூதன் தன்னை எவ்வாறு அழைக்கிறார் என்று ஆதி 31:13 ல் நாம் காணலாம் “நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.”
கர்த்தருடைய தூதனானவர் என்று யாத் 3:2 ல் சொல்லப்பட்டுள்ளது “அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.” ஆனால் இந்த தூதனானவர் தன்னை எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார் என்று யாத் 3:4,5,6 ல் நாம் காணலாம் “அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
கர்த்தருடைய தூதனானவர் என்று நியாதி 6:11 ல் சொல்லப்பட்டுள்ளது ” அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்தார்;” ஆனால் வேதம் அவரை கர்த்தர் என்று அழைப்பதை நியாதி 6:14, 23 ல் நாம் காணலாம் ” 14 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.” “23 அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். 24 அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.
ஆதியாகமம் 32 ல் யாக்கோபு யாரோடு போராடினான் என்று ஓசியா தீர்க்கதரிசி தெளிவாக கீழே உள்ள வசனத்தில் கூறுகிறார்.
ஆதி 32:24 யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,
29 அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். 30 அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.
ஓசியா 12:3,4,5 அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார். கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம்.
யாராலும் காணக்கூடாதா தேவன் மனிதர்கள் காணும்படிக்கு தூதனானவராக பழைய ஏற்பாட்டில் தன்னை வெளிப்படுத்தினார். பழைய ஏற்பாட்டில் வெளிப்பட்ட கர்த்தருடைய தூதனானவர் வார்த்தையாகிய தேவன் என்று நாம் புரிந்துகொள்ளலாம். புதிய ஏற்பாட்டில் வார்த்தையாகிய தேவன் தன்னை தேவனுடைய குமாரனாக வெளிப்படுத்தினானார் என்பது நாம் அறிந்ததே.
சகோ. வசந்தகுமார் அவர்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் என்ற புத்தகத்தில் இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். அவற்றை பின்வருமாறு காணலாம்
நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி
இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? (தானியேல் 10:13, 10:21, 12:1)
(இயேசுவை சிருஷடிக்கப்பட்டவராக காட்டுவதற்கும் அவர் தேவன் இல்லை என மறுப்பதற்கும் யெகோவா சாட்சிகளினால் சுட்டிக் காட்டப்படும் விடயங்களில் இதுவும் ஒன்றாகும். சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுரம் (தமிழ்) ஏப்ரல்-ஜூன் 2010 இதழிலும் இவ்விபரம் காணப்படுகின்றது இக்கட்டுரையாசிரியர் இதற்கு அப்பாலும் சென்று இது உண்மையானது தானா என வேத வசனங்களுடன் ஆராய்ந்துள்ளார்)
தேவனால் முதலாவதாகச் சிருஷ்டிக்கப்பட்ட தேவதூதனாகக் காண்பிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் உபயோகிக்கும் வேதவசனம் தானியேல் 10:13 ஆகும். இவ்வசனத்தில் “மிகாவேல்“ எனும் தேவதூதன் “பிரதான அதிபதிகளில் ஒருவன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இவ்வசனத்தையும் தானியேல் 10:21, 12:1 ஐயும் ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்து மனிதனாக வருவற்கு முன்பு. அவர் பிரதான தூதன் மிகாவேலாக இருந்ததாகக் கூறுகின்றனர். தானியேல் 12:1 இல் மிகாவேல் எழும்புவதைப் பற்றிய தீர்க்கதரிசனம் 1914 இல் இயேசுக்கிறிஸ்து பரலோக சிங்காகனத்தில் ராஜாவாக முடிசூட்டப்படதைப் பற்றியது(80) என்று கருதும் யெகோவாவின் சாட்சிகள் இவ்வசனத்தில் “எழும்புதல்“ எனும் பதத்தை.“அதிகாரத்தைக் கைப்பற்றி ராஜாவாய் அரசாளுதல்“ என்று விளக்குகின்றனர். (81)
தானியேல் 10:13 இல் மிகாவேல் “அதிபதிகளில் ஒருவன்“ என்றே குறிப்பிடப்பட்டுள்ளான் எனவே, மிகாவேலைப் போன்று இன்னும் பல தூதர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. ஆனால் தானியேல் 10.21 இல் “உங்கள் அதிபதி“ என்றும் 12:1 இல் “பெரிய அதிபதி“ என்றும் மிகாவேல் குறிப்பிடப்பட்டுள்ளமையாலும் 1தெசலோனிக்கேயர் 4:16 இல் “பிரதான தூதன்“ எனும் பதம் சுட்டுச் சொல்லுடன் ஒருமையில் இருப்பதனாலும் மிகாவேல் என்பவன் மட்டுமே பிரதான தூதன் என்று யெகாவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். (82) ஆனால் தெசலேனிக்கேயர் 4:16 இல் சுட்டுச்சொல்லும் ஒருமையும் ஒரேயொரு பிரதான தூதன் மட்டுமே இருக்கிறான் என்பற்கான ஆதாரம் அல்ல. பிரதான தேவதூதர்களில் ஒருவனைக் குறிப்பிட்டுச் சொல்லுவதற்காகவே இவ்விரு இலக்கணக் குறிப்புகளும் உள்ளன. (83) தானியேலின் புத்தகத்தில் முதல் தடவை மிகாவேல் “அதிப்திகளில் ஒருவன்“ என்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளமையால் (தானி 10:13) அதன்பின்னர் அவனைப் பற்றிக் கூறும்போது, பிரதான தூதர்கள் பலர் இருப்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், மிகாவேலைப போன்று ஏழு பிரதான தூதர்கள் இருக்கிறார்கள் என்பதே அக்காலத்தைய யூதர்களது நம்பிக்கையாக இருந்த்து(84) எனவே மிகாவேல் தனித்துவமானவனாக இல்லை. ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ தனித்துவமானவராக என்று யோவான் 3:16 கூறுகிறது. நாம் ஏற்கனவே பார்த்தபடி, இவ்வசனத்தில் “ஒரேபேறான குமாரன்“ என்பதற்கு மூலமொழியில் தனித்துவமானதுமான தன்மையை சுட்டிக் காட்டுகிறது. (85) அதாவது “பலரில் ஒருவர் என்பதல்ல, ஒரேயொருவர்“ என்பது இதன் அர்த்தமாகும். மேலும், இயேசுக்கிறிஸ்து வேதத்தில் “பிரதான அதிபதி“ என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதும் யெகோவாவின் சாட்சிகளின் விளக்கம் தவறானது என்பதற்கான ஆதாரமாகவுள்ளது. இயேசுக்கிறிஸ்து பிரதான அதிபதியாக அல்ல, முழுமையான அதிகாரமும் ஆளுகையும் கொண்ட “ராஜாதிவாகவும் கர்த்தாதி கர்த்தராகவும் இருக்கிறார். (வெளி. 19:16)
உண்மையில் இயேசுக்கிறிஸ்துவை தேவதூதன் என்று கூறுவது முழுமையான வேதப்புரட்டாகும். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்து தேவதூதர்களை விட மேலானவர் என்பது வேதாகமத்தின் தெளிவான போதனையாக உள்ளது. எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் முதலாம் அதிகாரம் 4ம் வசனத்திலிருந்து இரண்டாம் அதிகாரம் 18ம் வசனம் வரை தேவதூதர்களைவிட இயேசுக்கிறிஸ்து மேலானவர் எனும் சத்தியம் விளக்கப்பட்டுள்ளது. இப்பகுதியானது, இயேசுக்கிறிஸ்து இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.“ என்று ஆரம்பமாகின்றது. (எபி. 1.4) இயேசுக்கிறிஸ்து தேவதூதரை விட மேலானவர்(86) என்பதை இவ்வசனம் உறுதிப்படுத்துகின்றது. (87) மேலும் இவ்வசனத்தில் “நாமம்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் பெயர், பட்டம், பதவி, அந்தஸ்து, புகழ், நபர் என்று பலவித அர்த்தங்க்ளைக் கொண்டுள்ளது. ஆரம்பகாலத்தில் தேவனைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்ட இப்பதம் பிற்காலத்தில் யூத கிறிஸ்தவர்களால் இயேசுக்கிறிஸ்துவினுடைய பெயராகக் கருதப்பட்டது. (88) எனவே 1:4 இல் இயேசுக்கிறிஸ்து “விசேஷித்த நாம்முடையவராய்“ இருக்கிறார் எனும்போது அவர் தேவனாய் இருக்கிறார் எனும் அர்த்த்த்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. (89) “இயேசுக்கிறிஸ்து தேவதூதரைவிட மேலான அந்தஸ்தும், அதிகாமும், ஆளுமையும் உடையவராய் இருப்பதையே இவ்வசனங்கள் அறியத் தருகின்றன. (90) எனவே அவரைத் தூதன் என்ற கூறுவது மிகப் பெரிய தவறாகவே உள்ளது.
இயேசுக்கிறிஸ்துவைத் தம் குமாரன் என்று கூறிய தேவதூதரை இவ்வாறு அழைக்கவில்லை என்றும் (எபி 1:5) அவர்கள் தேவனுடைய ஊழியக்கார்ர்களாகவே இருக்கிறார்கள் என்றும் (எபி. 1:7) எபிரேயர் நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசுக்கிறிஸ்து தேவனுடைய குமாரனாய் இருப்பதனாலும், தூதர்களைத் தேவன் தம் குமாரன் என்று அழைக்காதமையினாலும் மிகாவேல் எனும் தேவதூதன் இயேசுக்கிறிஸ்து அல்ல என்பது தெளிவாகின்றது. (91)மிகாவேல் தேவதூதனே இயேசுக்கிறிஸ்து என்றால் இவ்விரு வசனங்களிலும் தேவன் கூறியவை பொய்யாகவே இருக்க வேண்டும். மேலும், தேவதூதர்கள் யாவரும் தம் குமாரனை வழிபட வேண்டும். என்று தேவன் கட்டளையிட்டதாகவும் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (எபி. 1:6) வேதாகமத்தில் தேவனை வழிபடுவதற்கு உபயோகிக்கப்பட்ட பதமே இவ்வசனத்தில் தேவதூதர்கள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதைப் பற்றிய தேவகட்டளையிலும் உள்ளது. தேவதூதர்கள் மட்டுமல்ல பிசாசுக்களும இயேசுக்கிறிஸ்துவுக்கு முன்பாக விழுந்து அவர் தேவனுடைய குமரன் என்று அறிக்கையிட்டன. (மாற். 3:11) தேவன் மட்டுமே வழிபாட்டுக்கு உரியவராய் இருப்பதனால் (மத். 4:10) தேவதூதர்கள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதானது அவர் தேவதூதர்களைவிட மேலானவராய இருப்பது மட்டுமல்ல “அவர் தேவனாய் இருப்பதையும் அறியத் தருகிறது. (92) மேலும், பிதாவினுடைய வலது பரிசத்தில் உட்காரும் சிலாக்கியம் இயேசுக்கிறிஸ்துவுக்கு கிடைத்த்து போல தேவதூதர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் எபிரேயர் நிருப ஆசிரியர் சுட்டிக் காட்டுவதும் (எபி. 1:13) தேவதூதர்களை விட இயேசுக்கிறிஸ்து மேலானவராய் இருப்பதற்கான ஆதாரயமாய் உள்ளது. மலும், தேவதூதர்கள் அனைவரும் இயேசுக்கிறிஸ்துவினால் சிருஷ்டிக்கப்பட்டவர்களாக இருப்பதும் (கொலோ. 1.16)(93) தேதூதர்களைவிடவும் மேலான நிலையில் அவர் இருப்பதை அறியத் தருகிறது.
மிகாவேலும் இயேசுக்கிறிஸ்துவும் ஒருவர் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னொரு வசனம் 1 தெசலோனிக்கேயர் 4:16 ஆகும். இவ்வசனத்தில் இயேசுக்கிறிஸ்து பிரதான தூதனுடைய சத்தத்தோடு வருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளமையால், இயேசுக்கிறிஸ்துவின் சத்தமே இவ்வசனத்தில் பிரதான தூதனுடைய சத்தமாக வர்ணிக்கப்பட்டுள்ளது(97) கூறுகின்றனர். எனினும் 2 தெசலேனிக்கியேர் 1:8 இன்படி இயேசுக்கிறிஸ்து தமது மறுவருகையில், வல்லமையின் தூதர்களோடு வருவதனால், பிரதான தூதனுடைய சத்தத்தோடு வருவார் என்ற 1 தெசலோனிக்கேயர் 4:16 இல் குறிப்பிடப்பட்டிருப்பது அவரோடு பிரதான தூதன் மிகாவேலும் வருவான் என்பதையே அறியத்தருகின்றது. எனவே இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தூதன் எனக் கூறுவது தவறாகும்.
இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகத்திற்கு வருவதற்கு முன்பு மட்டுமல்ல மரித்து உயிர்தெழுந்த பின்பும் மிகாவேல் எனும் தேவதூதனாகவே இருக்கிறார் என்றும் யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். மாம்சத்தில் மரித்த இயேசுக்கிறிஸ்து ஆவியாக உயிர்த்தெழுந்தார் என்பதே இவர்களது போதனையாகும. (98) எனவே “உயிர்த்தெழுதலின் பின்னர் அவர் சரீரமற்ற ஆவியாகவே இருந்தார் (99) என்று போதிக்கும் யெகோவாவின் சாட்சிகள் “மனிதர்களை மீட்பதற்காக்கத் தம் சரீரத்தை மீட்கும் பொருளாக்க் கொடுத்த இயேசுக்கிறிஸ்து மறுபடியும் தன் சரீரத்தை எடுத்துக் கொள்ளவில்லை (100) என்றும் அவரால் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாதிருந்த்து எனவும் விளக்குகின்றனர்(101) மேலும் கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்த அவரது சரீரம் தேவனால் அழிக்கப்பட்டது என்றும் இவர்கள் கூறுகின்றனர். (102) உயிர்த்தெழுந்த பின்னர் இயேசுக்கிறிஸ்து சரீரம் இல்லாமல் ஆவியாக மட்டுமே இருக்கின்றார்“ எனும் தங்களது வேதப்புரட்டுக்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் வேதவசனம் 1 பேதுரு 3:18 ஆகும். (103) இவ்வசனத்தின் இறுதிப்பகுதியில் “அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அவ்வசனம் யெகோவாவின் சாட்சிகள் தர்கிப்பது போல இயேசுக்கிறிஸ்து சரீரமற்ற ஆவியாக உயிர்த்தெழுந்தார் என்று கூறவில்லை. மூலமொழியில் இவ்வாக்கியத்தின் இலக்கண அமைப்பு முறையை அடிப்படையாக்க் கொண்டு “ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.“ (104) என்றும் ஆவிக்குரிய நிலைக்கு உயிர்ப்பிக்கப்பட்டார்(105) என்றும் இருவிதமாக மொழிபெயர்க்கலாம். எனினும் யெகோவாவின் சாட்சிகள் கூறுவதுபோல் “சரீரம் இல்லாமல் வெறும் ஆவியாக உயிர்ப்பிக்கப்பட்டார்(106) என்று இவ்வசனத்தை எவ்வித்த்திலும் மொழிபெயர்க்க முடியாது. இயேசுக்கிறிஸ்து ஆவிக்குரிய நிலைக்கு உயிர்ப்பிக்கப்பட்டார் என்று கூறும்போது அவர் சரீரமற்ற நிலையில் ஆவியாக இருந்தார் என்பது அர்த்தமல்ல. உயிர்த்தெழுந்த இயேசுக்கிறிஸ்து தமது சரீரத்தை இழந்தவராக அல்ல, மாறாக மகிமையடைந்த சரீரத்துடனேயே உயிர்தெழுந்தார் தம்மை ஒரு ஆவி என்று நினைத்துப் பயந்த சீடரிடம் “நான் தான் என்ற அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள் என்னைத் தொட்டுப் பாருங்கள் நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல் ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்கு காண்பித்தார். (லூக். 24:37-40) உயிர்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவே தாம் ஆவியல்ல என்றும் தமக்கு மாம்சமும் எலும்பும் இருப்பதாகவும் அறியத்தந்துள்ளமையால் யெகோவாவின் சாட்சிகளின் தர்க்கம் உண்மைக்கு மாறான விளக்கமாகவே உள்ளது.
உண்மையில் கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் அழிந்து போகவில்லை. “அவருடைய மாம்சம் அழிந்து போகாது என்று தீர்க்கதரிசிகளினால் முன்னறிவிக்கப்பட்டது போலவே அவர் சரீரப்பிரகாரமாக உயிர்த்தெழுந்தார் என்பதை அப்போஸ்தலர் 2:31 அறியத் தருகின்றது (107) இயேசுக்கிறிஸ்துவும் தமது சரீரம் மூன்று நாளைக்குப் பின் உயிர்த்தெழும என்பதை முன்னறிவித்திருந்தார் (யோவா. 2:19-22) (108) சரீரப்பிரகாரமாக உயிர்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் மகிமையடைந்த நிலையில் இருந்தமையால் அவர் சடுதியாகத் தோன்றி மறையக்கூடியவராகவும் பூட்டப்பட்டிருக்கும் அறைக்குள் வந்து போகக்கூடியவராகவும் இருந்தார்(லூக். 24:31, 24:36) உயிர்த்தெழுந்த பின்பு அவர் சரீரத்தில் இருந்ததை அவரது சீடர்கள் தொட்டுப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடியதாகவும் இருந்தது (மத். 28:9, லூக் 24:39, யோவா. 20:17) இயேசுக்கிறிஸ்து மரிக்கும்போது அவரது சரீரத்தில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் உயிர்த்தெழுந்த பின்பும் இருந்தன. (யோவா 20:25-27)(109).. எனவே உயிர்த்தெழுந்த பின்னர் அவர் சரீரமில்லாமல் ஆவியாக இருந்தார் என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
இயேசுக்கிறிஸ்து சரீரப்பிரகாரமாக உயிர்த்தெழுந்த்தை மறுதலிக்க யெகோவாவின் சாட்சிகள் உபயோகிக்கும் இன்னுமொரு வேதப்பகுதி 1 கொரிந்தியர் 15:44-50 ஆகும். 44ம் வசனத்தில் “ஜென்ம சரீரம் விதைக்கப்படும் ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும். எனும் வாக்கியத்தை சுட்டிக் காட்டும் இவர்கள் இயேசுக்கிறிஸ்து ஆவியாவே உயர்த்தெழுந்தார் என்று கூறுகின்றனர். மேலும் 50ம் வசனத்தில் “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய இராஜியத்தை சுதந்தரிக்க மாட்டாது“ என்று குறிப்பிடப்பட்டுள்ளமையால் இயேசுக்கிறிஸ்து சரீரம் இல்லாத நிலையில் ஆவியாகவே உயிர்தெழுந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர் (110) உண்மையில் யெகோவாவின் சாட்சிகள் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள விடயத்திதைக் கருத்திற் கொள்ளாதவர்களாக தங்களது உபதேசத்துக்கு ஆதாரமாக இவ்வதிகாரம் இருப்பதாக எண்ணுகின்றனர். கொரிந்து சபையில் மரித்தோரின் உயிர்த்தெழுதலை மறுதலித்த ஒரு குழுவினர் இருந்தனர். (111) இதனால் மரித்தோர் சரீரப்பிரகாரமாக உயிர்தெழுவார்கள் என்பதையும் (1 கொரி. 15:12-23) உயிர்தெழுதலில் தற்போதைய மாமிசசரீரம் மகிமையடைந்த நிலையில் இருக்கும் என்பதை ( 1 கொரி. 15.35-50) பவுல் விபரமாக விள்க்கியுள்ளார். உயிர்த்தெழுதலில் மாம்ச சரீரம் “ஆவிக்குரிய சரீரமாக“ இருக்கும். என்று இவ்வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, சரீரம் இல்லாமல் ஆவி மட்டும் இருக்கும் என்று கூறவில்லை (1 கொரி. 15:44-46) உண்மையில் நாம் இப்போது இருக்கும் சரீரத்தில் அல்ல மாறாக மகிமையடைந்த ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்ப்பிக்கப்பட்டு பரலோகத்தில் இருப்போம் என்பதையே “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை“ எனும் வாக்கியத்தின் மூலம் பவுல் அறியத் தந்துள்ளார்.
உயிர்தெழுதல் சரீரமற்ற ஆவியில் வருவது என்று 1 கொரி. 15ம் அதிகாரத்தின் எந்த ஒரு வசனத்திலும் குறிப்பிடப்பட்வில்லை. உயிர்த்தெழுந்த நிலையில் நமக்கு ஆவிக்குரிய சரீரம் இருக்கும் என்றே இவ்வதிகாரம் அறியத் தருகிறது. (1 கொரி. 15:44) பவுலினுடைய நிருபங்களில் “சரீரம்“ என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்படப்டுள்ள பதம் (somma) (113) மாம்சபிரகாரமான சரீரத்தையே குறிக்கின்றது. பவுல் இவ்வர்த்தத்திலேயே எல்லா இடங்களிலும் இப்பதத்தை உபயோகித்துள்ளார். (114) எனவே 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் உயிர்த்தெழுதலின் பின்னர் உள்ள ஆவிக்குரிய சரீரம் தற்போது தமக்கிருக்கும் மாம்சரீரத்தின் மகிமையடைந்த நிலையில் இருக்கும் என்றே பவுல் அறியத்தந்துள்ளார். இவ்விதமாகவே, உயிர்த்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவின் சரீரமும் மகிமையடைந்த நிலையில் இருந்ததாக வேதம் கூறுகிறது.